பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தலே சீவகாருணிய ஒழுக்கமெனப்படும்.

உயிர்கள், பசி, தாகம், இச்சை, எளிமை, பயம் கொலை இவைகளால் துக்கத்தை அநுபவிக்கக் கண்ட போதாகினும், கேட்டபோதாகினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாகினும் உயர்களின் தொடர்பாக ஆன்ம உருக்கம் உண்டாகும். உயிர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கை உண்மை ஏகதேசங்களாய் எல்லாம்வல்ல கடவுளால் உடம்போடு கூட்டிப் படைக்கப்பட்டமையால் ஒத்த உரிமை உள்ள சகோதரர்களேயாவர். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்ற போதும் துக்கப்படுவார் என்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரர் என்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கம் உண்டாவது சகோதர உரிமையாம்.

ஆகவே, ஒருயிர், துன்புறக் கண்டபோதும் துன்பப் படும் என்று அறிந்த போதும் மற்றொரு உயிர்க்கும் உருக்கம் உண்டாவது பழைய ஆன்ம நேய உரிமை என்று அறிதல் வேண்டும். துக்கப்படுகின்றவரைத் தமது சகோதரர் என்று அறியத்தக்க 'ஆன்ம அறிவு' என்னும் கண்ணானது அறியாமை, இருளால் மறைக்கப்பெற்று, ஒளி மழுங்கினபடியாலும் அவைகளுக்கு உதவும் கருவிகளாயமைந்த மனம் முதலான கண்ணாடிகளும் ஒளிதரும் ஆற்றல் இன்றித் தடிப்புள்ளவைகளாக இருந்தபடியாலும் மக்கட்குலத்தாரிடையே சகோதர உரிமை இருந்தும் சீவகாருண்யம் உண்டாகாமலிருந்தது. இதனால் சிவகாருண்யம் உள்ளவர்களே மன்னுயிரனைத்தையும் ஒக்கப் பார்க்கும் உயர்விளக்கம் உள்ளார் என்று அறிதல் வேண்டும்.