பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


விடும், ஆகவே ஒவ்வோர் ஆன்மாவுக்கும் பூதகாரியமாகிய உடம்பு இன்றியமையாததாகும். அவ்வுடம்புக்கு மாயை என்னும் சடப்பொருளே முதற் காரணமாகும். ஆதலால் அந்த மாயையின் பல்வேறு விளைவுகளாகிய பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை என்பவைகளால் உயிர்கள் பெற்ற உடம்புகளுக்கு அடிக்கடி இடையூறுகள் நேரிடுகின்றன. அத்தகைய இடர்கள் நேராமல் அகக்கருவி புறக்கருவியாகியவற்றின் உதவியைப் பெற்ற தம்முடைய அறிவைத் துணையாகக் கொண்டு மிகவும் விழிப்போடு முயற்சி செய்து அவ்விடர்களைத் தடுத்துக்கொள்வதற்குக் தக்க வல்லப சுதந்தரம் (ஆணையாகிய உரிமை) மக்கள் உயிருக்கு அருளால் கொடுக்கப் பெற்றுள்ளது. மன உணர்வுடைய மக்கள் எல்லோரும் தமக்குக் கொடுக்கப்பட்ட வல்லப சுதந்தர மாகிய அவ்வுரிமையினைக் கொண்டு உடம்புடன் வாழ்ந்து தமக்கு நேரிடும் இடர்களை நீக்கி ஆன்ம லாபத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்யக்கடவர்.

ஊழ்வினையாலும் விழிப்பின்மையாலும் வரும் இடர்களை நீக்கிக் கொள்ள மாட்டாமல் வருந்துகின்ற பிற உயிர்களின் வாழ்க்கையில் நேரும் இடர்களை நீக்கத் தக்க ஆற்றல் பெற்றமக்கள், அவ்வுயிர்கள் படும் துன்பத்தை நீக்குவித்தல் வேண்டும். அவ்வாறு இடர் நீக்கும் தரத்தில் பசி, கொலை என்பவற்றால் வரும் துன்பம் தவிர, தாகம் பிணி இச்சை எளிமை பயம் என்ப வற்றால் வரும் துன்பங்களை மாற்றுவது அபரஜீவ காருண்யம் (இயல் கருணைத்திறம்) எனப்படும். இது உலக இன்பத்தை மாத்திரம் சிறிது உண்டுபண்ணும். பிற உயிர்களுக்குப் பசியினால் வரும் துன்பத்தையும் கொலையினால் வரும் துன்பத்தையும் நீக்குவது பரசிவ காருண்யம் (பெருங்கருணைத்திறம்) எனப்படும். இது இவ்வுலக இன்பங்களையும் அளவிறந்த சித்தியின்பங்