பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


அருட்பெருஞ்சோதி அகவலில் தமிழ் நெடுங்கணக்கின் உயிர்வர்க்கத்தில் வைத்து அருட்பெருஞ்சோதியைப் போற்றும் வள்ளலார் 'ஒள' காரத்தையடுத்து ஆய்த(ஃ) எழுத்தில் வைத்து உணர்த்தும் நிலையில் திருநிலைத் தனிவெளி, சிவவெளியெனுமோர், அருள் வெளிப்பதிவளர் அருட்பெருஞ்சோதி (அகவல் 27-28) எனக் கூத்தப் பெருமானைப் போற்றுகின்றார். இத் தொடரில் அருள்வெளிப்பதி என்பது இரு கண்களுக்கு இடையே புருவ மத்தியிலமைந்த இடைவெளியினை. இது கீழ் இரண்டும் மேல் ஒன்றும் ஆக அமைந்த (ஃ) முப்புள்ளி வடிவாகிய ஆய்தவெழுத்தினைப் போன்று இரண்டு கண்களுக்கு மேல் மத்தியில் அமைந்திருத்தலின் 'ஒள'கார எழுத்தினையடுத்துக் கூறப்பட்டுள்ளமை உய்த்துணர்தற்கு உரியதாகும். இத்தியான முறையினை:-

நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமனிருந்திடும்
சிற்றம் பலமென்று தேர்ந்துகொண்டேனே

(2770)

என வரும் திருமந்திரத்தில் திருமூல நாயனார் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம். இத் திருமந்திரப் பொருளை அடியொற்றி:-

'கையறவி லாதுநடுக் கண் புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டு திறந்துண்டு நடு நாட்டு'

(5–528)

எனவும்,

உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது
குளத்தினும் நிரம்பிய குரு சிவபதியே

(அகவல் 1037-38)