பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


அதிகமான் நெடுமான் அஞ்சி என்னும் வள்ளல் என்பது புலப்படுத்தப்பட்டமை காணலாம்.

எல்லா நூல்களிலும். கூறப்படும் நல்லறங்களைத் தொகுத்தெடுத்து எல்லா மக்களுக்கும் பொதுப்படக் கூறும் அறநூலாசிரியராகிய திருவள்ளுவர், கொல்லாமை என்னும் நல்லறத்தை விளக்குமதிகாரத்தில் கொல்லாமையாகிய அறத்திற்கு அடிப்படையாயமைந்தது பகுத்துண்ணுதலாகிய இவ்வறமே என்பதனை,

"பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாம் தலை"

எனவரும் திருக்குறளில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

உண்ணுதற்குரிய உணவினை, பசியால் வருந்திய உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து எஞ்சியதனைப் பின் தான் உண்டு, எல்லா உயிர்களையும் சோர்ந்தும் இறப்பு நேராமல் குறிக்கொண்டு பாதுகாத்தல் அறநூலுடையார் தொகுத்த நல்லறங்கள் எல்லாவற்றுள்ளும் முதன்மையாகிய அறமாகும் என்பது மேற்காட்டிய குறளின் பொருளாகும்.

இதனால் கொல்லாமையாகிய, அறத்திற்குப் பகுத்துண்ணுதலாகிய அறம் அடிப்படையாய் அமைந்த உண்மை நன்கு புலப்படுத்தப் பெற்றமை காணலாம்.

தவச் செல்வர்களுக்குரிய வலிமையாவது, தம்மையுற்ற பசிப்பிணியைப் பொறுத்துக் கொள்ளுதல். அத்தகைய தவவலிமையும் வறியோரது பொறுத்தற்கரிய பசியைத் தமது பகுத்துண்ணும் அறத்தால் ஒழிப்பாரது வலிமைக்குப் பிற்பட்டதேயாகும். தாமும் பசியால்