பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


வருந்திப் பிறரது பசி வருத்தத்தையும் தீர்க்க மாட்டாதாராகிய தவச் செல்வர்களது வலிமையைக் காட்டிலும் தாமும் பசியால் வருந்தாது பிறரது ப்சிப்பிணியையும் தீர்ப்பாராகிய இல்லறத்தாரது வலிமை மிகவும் சிறந்த தென்பது இக்குறளால் நன்கு வலியுறுத்தப்பட்டது.

ஊண், உடை, உறையுள் என்பனவற்றை நாடிப் பெறும் முயற்சி, வாழ்க்கையின் முதற்படியாகும். வயிறார உண்டு மகிழ்தலே எல்லாருடைய விருப்பமாகும். அருளும் ஆற்றலும் நிரம்பிய பெருவள்ளல்கள் பசியால் துன்புறும் எளியவர்களுக்கு வேண்டும் உணவளித்து அவர்களை ஊக்கத்துடன் உழைக்கும் நல்லுணர்வுடையவர்களாகச் செய்தார்கள். தங்களை அடைந்தவர்களுடைய வயிற்றுப் பசியைத் தணித்தலே இவ்வள்ளல்களின் வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்தது. பரிசிலர் சுற்றத்துப் பசிப்பகையாகி விளங்கிய இவ்வள்ளல்களை நாடாளும் மன்னர்களும் பாராட்டிப் போற்றினார்கள். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சியில் சோழநாட்டில் உள்ள சிறுகுடி என்னும் ஊரின் தலைவனாய் விளங்கிய பண்ணன் என்பான், பசியால் வருந்தி வரும் எளியவர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்துப் போற்றி வந்தான். பிறர் வறுமை நோக்கி உதவும் பண்ணனது பேரறச் செயலை வேந்தர் பெருமானாகிய கிள்ளிவளவன் கேள்வியுற்றான். பண்ணன் வாழும் சிறுகுடிக்குச் சென்று அவனுடைய நல்லறச் செயல்களைப் பாராட்டி மகிழ வேண்டுமென எண்ணித் தானும் ஒரு பரிசிலன் போல் அவனுடைய சிறுகுடிக்குப் புறப்பட்டுச்சென்று அவ்வூரின் எல்லையை அடைந்தான். புது வருவாயை யுடையதாகிப் பழுத்த மரத்தின் கண்ணே புறவைக் கூட்டம் ஒலித்தாற் போன்று பண்ணனது மனையிற் பெருந்திரளாகக் கூடியுண்ணும் மக்களின்