பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


சகிக்கத் தொடங்கில் உயிரிழந்து விடுவார்கள். பசி நேரிட்ட போது பெற்றோர்கள், பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றோர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும் அந்தப் பசியினால் வரும் துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்களென்றால், அன்னியமாகிய வீடு, மாடு, நிலம், உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வார்களென்பது சொல்ல வேண்டுவதில்லை. உலக முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் பசி நேரிட்ட போது தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால், பசி நேரிட்டது, என்ன செய்வது? என்று அருகிலிருக்கின்ற அமைச்சர் களிடத்துக் குறை சொல்கிறான். பகைவரால் எறியப் பட்ட மார்பிலுருவிய பானத்தையும் கையாற்பிடித்துக் கொண்டு எதிரிட்ட பகைவரையெல்லாம் அஞ்சாது ஒரு நிமிடத்தில் வெல்லத்தக்க சுத்தவீரரும் பசி நேரிட்டபோது செளரியத்தை - வீரத்தை இழந்து பசிக்கஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து, 'இளைப்பு வருமே, சண்டை எப்படிச் செய்வது?' என்று முறையிடுகின்றார்கள். இவ்வுலக போகங்களோடு இந்திர போக முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து முற்றும் துறந்து அறிவையறிந்து அநுபவம் விளங்கிய ஞானிகளும். இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து உண்மை நிட்டையிலிருக்கின்ற யோகிகளும், இறந்தோரை எழுப்பத்தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும, முனிவர்களும் தவசிகளும், பசி நேரிட்டபோது தங்கள் தங்கள் அனுபவ லட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு - பிச்சைக்கு வருகின்றார்கள். பலி நேராத போது - பிச்சைகிடைக்காத போது நிலை கலங்குகிறார்கள். சொப்பனத்தில் ஒரு இழிவுவரினும் அது.