பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi


பின்பற்றிய நெறி சைவசித்தாந்தமே என்பது முப்பத்தாறு தத்துவங்கள் பற்றியும், மும்மலங்களாகிய பாசங்கள் பற்றியும், ஆன்ம வியல்பு பற்றியும் பதியியல்பு பற்றியும் அவர்கூறும் விளக்கங்களால் நன்கு புலனாகும்.

இந்நூலை எழுதும்படி தூண்டித் துணைபுரிந்தவர் தில்லைத் திருக்கோயில் திருப்பணிச் செல்வர் தரும பூஷணம் செ. இரத்தினசாமி செட்டியாரவர்களின் முதல் மைந்தர் என் கெழுதகைத் தம்பியார் திரு. பாலசுப்பிரமணியம் ஆவர். செந்தமிழும் சிவநெறியும் தம் இரு கண்களாகக் கொண்டு போற்றும் இயல்பினராகிய இவரும், இவருடைய தம்பியர் திரு. இராமநாதன் திருநாவுக்கரசு ஆகியோரும் சுற்றமும் நட்பும் சூழப் பொன்னம்பலத்தில் அருள்நடம் புரியும் அம்பலவாணர் திருவருளால் எல்லாச் செல்வங்களும் நற்பேறுகளும் இனிது பெற்று நாடு நலம் பெற நீடு வாழ்தல் வேண்டும் என உளமுவந்து வாழ்த்துகின்றேன்.

உடல் நலங்குறைந்த நிலையிலும் இத்தகைய தமிழ்ப் பணிகளில் யான் ஈடுபடும் அளவுக்குத் தனது உடல்நலத் தைப் பொருட்படுததாது எனது உடல்நலத்தைப் பேணி வரும்என் வாழ்க்கைத்துணைவி திரு. பொற்றடங்கண்ணி உடல்நலமும் உளநலமும் பெற்று நீடு வாழ்தல் வேண்டும் என அன்புடன் வாழ்த்துகின்றேன்.

சைவத்திருமுறைகளில் நிலை பெற்ற சிந்தையராய் வள்ளலார் அறிவுறுத்திய சமரச சுத்த சன்மார்க்கச் செந்நெறியினைக் கடைப்பிடித்தொழுகும் செந்தமிழ்ச் செல்வர் திரு பழ. சண்முகனார் அவர்களது ஆர்வத்தின் விளைவாக, அமைந்ததே ”திருவருட்பாச் சிந்தனை” என்னும் இந்நூலாகும்.