பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


பண்டைத் தமிழ்க் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் ஆபுத்திரனும் அறவண அடிகள் என்னும் புத்ததுறவிபால் உபதேசம் பெற்றுத் துறவு பூண்ட மாதவியின் மகள் மணிமேகலையும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் பிச்சை யெடுத்தாவது மக்களது பசிப்பிணியைப் போக்கிய செய்திகள் நன்கு விரித்துக் கூறப் பெற்றுள்ளன. சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் திருவருட் பிரகாச வள்ளலார் தோன்றி நம் நாட்டில் எத்தகைய வேறுபாடும் கருதாது மக்களது பசிப்பிணியினை நீக்குதற்கென்றே சத்திய தருமச்சாலையை நிறுவித் தமது திருவருட் புலமைத் திறத்தால் ஏழையெளியவர்கட்குப் பசிதீர உணவளிப்பதே கடவுட் பணி என்ற எண்ணத்தினை மக்கள் உள்ளத்திலே நன்கு நிலை பெறச் செய்தருளினார்கள். அடிகளார் சமுதாய வளர்ச்சிக்கெனத் தொடங்கிய இச்செயல், மக்களது ஆட்சி யுருப்பெற்று வளரும் இக்கால அரசியல் ஆட்சி முறைக்கு அரண் செய்யும் நிலையில் அமைந்துள்ளமை அறிந்து போற்றத் தகுவதாகும்.