பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


ஐம்புலன்களே ஒளிதரும் நல்விளக்காகவும் அன்னோர் அகத்தே புரியும் சிவபூசையில் அமைதற்குரியன என்பது இத் திருமந்திரத்தின் பொருளாகும்.

தெளிந்த சிந்தையினர்களாகிய சிவஞானிகள் செய்யும் இவ்வைகப் பூசையானது, எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் நீக்கமின்றி எழுந்தருளியிருக்கும் நீர்மையை நன்கு வற்புறுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம். இவ்வாறு உயிர்கள் யாவும் இறைவனை வழிபடுதற்குரிய அருட்குறியாகத் திகழும் உண்மையை உணர்ந்த அருளாளர்கள் மன்னுயிர்களை இரக்கமின்றிக் கொல்லுதலும், அவற்றின் ஊனைத்தின்று தம்முடம்பைப் பெருக்குதலும் ஆகிய தீவினைகளை மனத்தாலும் எண்ணமாட்டார்கள், உயிர்களைக் கொல்லாமையும் அவற்றின் ஊனாகிய புலாலை உண்ணாமையுமாகிய அருளறவழியில் ஒழுகுவோர் எல்லாவுயிர்களும் தம்மைக் கைகூப்பித் தொழும் தெய்வ நிலையை இவ்வுலகில் வாழும் பொழுதே அடைகின்றார்கள். இவ்வுண்மை,

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா வுயிரும் தொழும்.

எனவரும் தெய்வப்புலவர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

வேள்வியிலும் சிறு தெய்வ வழிபாடுகளிலும் ஆடு, கோழி முதலிய சிற்றுயிர்களைப் பலியிடும் வழக்கம் நம் நாட்டு மக்களிடையே நெடுங்காலமாக நிலைபெற்று வந்தது என்பதனைப் பலரும் அறிவர். இவ்வாறு மக்கள் தம்முடைய சொந்த விருப்பம் நிறைவேறுதற் பொருட்டுப் பிறவுயிர்களைப் பலியிடும் வழக்கம் நம்