பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


வளர்ச்சிக்கும் அன்பு, அருள் முதலிய உயிர்ப்பண்பின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒழுகலாறு, கொலையும் புலையுந் தவிர்ந்த அருளற வாழ்வேயாகும்.

இத்தகைய நல்லற வாழ்வினைக் கற்றார்-கல்லாதார் ஆகிய எல்லாரும் உளமுவந்து ஏற்றுக்கொண்டு 'கொல்லாமை-புலால் உண்ணாமை' ஆகிய இவ்விரு பேரறங்களையும் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகும் வண்ணம் தெளிவாக அறிவுறுத்திய அருளாளர் அருட்பிரகாச வள்ளலாரே யாவர்.

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்வடநாட்டிற் குடிபுகுந்த ஆரிய இனத்தார் தம்முடைய வேதநெறிப்படி செய்த யாகங்களில் ஆடு, மாடு முதலிய விலங்கினங்களைக் கொன்று தம்மால் வழிபடப் பெறும் இந்திரன், வருணன் முதலிய தேவர்கட்கு அவியுணவாக இட்டு வந்தனர். இவ்வாறு வைதீக யாகங்களில் விலங்கினங்களாகிய சிற்றுயிர்களைக் கொல்லும் செயல் மிகுந்து காணப்பட்ட நிலையிலேயே அருளாளர்களாகிய-மகாவீரரும் கெளதம புத்தரும் நம்நாட்டிலே தோன்றி இத்தகைய கொலை வேள்விகளைத் தடுத்துநிறுத்தும் அருட்பணியில் ஈடுபட்டனர். அவ்வருளாளரது அறவுரையினைச் செவி மடுத்தமக்கள் எவ்வுயிர்களிடத்தும் இரக்கம் உடையராய் கொலையும் புலையும் தவிர்த்து வாழும் அருளற நெறியினைக் கடைப் பிடித்தொழுகுவாராயினர். இவ்வாறு, கொல்லாமை-புலாலுண்ணாமையாகிய இரு பேரறங்களையும் கடைப்பிடித்து வாழுதற்குரிய நெறி முறையினை வகுத்தளித்த அருளாளர்களுள் முதன்மை பெற்று விளங்குபவர் சமண சமயத் தலைவராகிய மகாவீரர் ஒருவரே எனக் கூறுதல் மிகவும் பொருத்த முடையதாகும். அறவழியில் பொருளீட்டி அப்பொருளால் இன்பம் நுகர்ந்துவாழும் நெறிமுறையினைக் கூறும்