பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


புலால் என்பது பிறிதோர் உடம்பின் புண்ணாகும். இவ்வாறு அதன் இழிவினைத் தெரிந்து கொண்டவர்கள் அதனை உண்ணாதிருத்தல் வேண்டும எனப்பொருந்து மாறாகிய உத்தியினால் புலால் உணவின் இழிவினைப புலப்படுத்துவது,

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்.

எனவரும் திருக்குறளாகும்.

வேள்வித் தீயின்கண் நெய் முதலிய அவி உணவினைச் சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட உடம்பினின்றும் ஒர் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாதிருத்தல் மிகப் பெரிய அறமாகும் என அறிவுறுத்துவார்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

என்றார் திருவள்ளுவர்.

ஆயிரம் வேள்விகளைச் செய்து அல்லற்படுவதைக் காட்டிலும் புலால் உண்ணுதலாகிய தீவினை ஒன்றைச் செய்யாது சும்மாயிருத்தலே உயிர்க்குப் பெரும்பயன் விளைக்கும் என்பதனை இத் திருக்குறள் நன்கு வற்புறுத்தல் காணலாம்.

இவ்வாறு சான்றோர் பலரும் உயிர்ப்பலியையும் புலாலுணவினையும் தீயன என விலக்கிய நிலையிலும் இத்தீமைகள் பழக்கங் காரணமாக நம் நாட்டில் மக்களிடையே தொடர்ந்து வருதல் கண்டு அருளாளர் பலரும் மனங்கவன்று வருந்தியுள்ளார்கள்.