பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கம், பிஎச்.டி. டி.லிட்
முன்னைத் துணை வேந்தர், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்

பேராசிரியர் திருமுறைச்செல்வர் வெள்ளை வாரணனார் மானுற எழுதிய திருவருட்பாச் சிந்தனை என்ற பெருவிளக்க நூலுக்குக் கெழுதகை நட்புக்கருதி அணிந்துரை எழுத வேண்டியவன் ஆகின்றேன். குங்கிலியம் சண்முகனார் பங்கும் ஈடுபாடும் இப்பனு வலுக்கு உண்டு என்று அறியும் போது, என் அணிந்துரையைப் பணிந்துரையாகவே கருதவேண்டும். துணை வேண்டாச் செருவென்றி என்பது போல, அணிந்துரை வேண்டா அருள் நூல் இது.

அருட்பாச்சிந்தனை என்ற இந்நூல் திருவருட்பாவைக் களமாகக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக இடையறாது ஓடிவந்த தமிழ்ச்சிந்தனைகளின் வரலாறு கூறும் முறை நூலாகும். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ, என்றபடி, தொல்காப்பியவாழை, சங்கவாழை, திருக்குறள் வாழையாக, திருமுறை பிரபந்த வாழையாக, தாயுமானார் வள்ளலார் வாழையாக, பாரதியார் பாரதி தாசன் வாழைக்கன்றுகளாக வற்றாது பாய்ந்து வரும் தமிழ் நீரியலைப் பளிங்குப் படுத்துவது இச்சிந்தனை நூல் வாழையடிவாழையாக வந்தாலும் அவற்றின் தாற்றுக் கொழுமைகள் வேறுபடுமன்றோ?

வள்ளலார் உலகிற் பரப்ப எண்ணிய சமரச சுத்த சன்மார்க்க நெறியானது சைவசமயத்திற் கால் கொண்டு