பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144


வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய்யுறவாம் பொருளே

(திருவருட்பா 4133)

எனவரும் அடிகளாரது வாய்மொழியால் நன்கு துணியப்படும்.

இங்ங்னம் இராமலிங்கர் தமது குழந்தைப் பருவத்தில் கண்டுணர்ந்த சிதம்பர ரகசிய தரிசனமாகிய அருட்பெருஞ்சோதி வழிபாட்டினைத் தமது நாற்பத்தொன்பதாம் அகவையில் வடலூர்ப் பெருவெளியாகிய உத்தரஞான சிதம்பரத்திலே சத்தியஞானசபையில் அமைத்துக் காட்டியமை இங்குக் கருதற்குரியதாகும்.

ஞானமே திருமேனியாகவுடைய குமாரசிவமாகிய இறைவன் “கரவாகிய கல்வியுளார் கடைசென்று இரவா வகை” இராமலிங்கருக்கு மெய்ப்பொருட் கல்வியாகிய நிதியத்தை வாரி வழங்கினான் என்பது அடிகள் வரலாற்றிற் காணப்பெறும் சிறப்புடைய நிகழ்ச்சியாகும். 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து' எனத் தெய்வப்புலவர் அருளியவாறு முன்னைப் பிறப்பில் பெற்ற கல்வி அறிவு ஒழுக்கமாகிய அநுபவங்கள் விட்டகுறை தொட்டகுறை என்னுமாறு இராமலிங்கருக்குத் தன்னியல்பில் புலப்பட்டுத் தோன்றுமாறு இறைவன் அருள்புரிந்தனன். தமது மூன்றாவது ஆண்டிலேயே காழிக்கவுணியப் பிள்ளையார் உமையம்மையார் அளித்த பாலடிசிலைப் பருகி வேத முதலாய எல்லாக் கலைகளையும் ஒதாதுணர்ந் தருளினார் என்பது வரலாறு. ஒதாதுணர்ந்த ஆளுடைய பிள்ளையாராகிய பெருமானைத் தமது குருவாகக் கொண்டு நாள்தோறும் பிள்ளையார் அருளிய திருநெறிய