பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi


சுத்தசன்மார்க்கம் என்று அருளறம் தெளித்தார் இராமலிங்கர். அதனாற்றான் அவர்பாடியவை அருட்பா ஆயின. அவரும் அருட்பிரகாசர் ஆயினர். அவர்தம் மந்திரமும் அருட்பெருஞ் சோதியாயிற்று. 'அருளே நங்குலம் அருளே நம்மினம்' என்பது வள்ளலாரின் நிறைமொழி. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பது திருக்குறள், இவ்வுலகமேயில்லை என்பது அருட்பா.

வள்ளலாரின் திருமுகம் எப்போதும் துயரக்குறியாய் இருந்தது என்று அறிகின்றோம் அவருக்கு ஏற்பட்ட துயரங்கள் என்னை? பயிரின் வாட்டங்கண்டு வாடினார். உயிர்ப்பலி வாங்கும் சிறுதெய்வ வெங்கோயில் கண்டு பயந்தார்; யாரே யாயினும் பசியார பிணியால் வெதும் பியபோது பதைத்தார்; இறந்தார்க்காக உறவினர் அழுகுரல் கேட்டபோது நடுங்கினார்; பகைமன்னர்கள் போர்க்கொலை குவித்தபோது தளர்ந்து துடித்தார்; பல்லி கூகை, காக்கை, பருத்து இவற்றின் கடுங்குரல் கேட்டபோதெல்லாம் என்ன துன்பப்பட்டனவோ என்று கலங்கினார்; பாம்புபடமெடுத்த போது நஞ்சு எதனைக் கொல்லுமோ என்று உள்ளம் ஒடுங்கினார்; வீடுதோறும் இரந்தும் பட்டினி கிடப்பாரைக் கண்டு இளைத்தார். பசித்தார்க்கு உதவமுடியவில்லையே என்று வருந்தித் தான் சிறிய அளவே உண்டார்.

சாதி மத சமயச் சடங்குகளின் வேதாகமங்களான சாத்திரங்களில் வள்ளலார் ஒருமைப்பாடு காணவிரும்ப வில்லை என்பதனையும் இவையெல்லாம் பொய்யாம் சழக்காம் என வெறுத்தார் என்பதனையும் கருதுக.