பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172


தாம் அருளிய திருப்பாடல்களில் வழங்கியுள்ளமை இங்குக்குறிப்பிடத் தகுவதாகும்.

உயிர்கள் உய்தி பெறுதற் பொருட்டு இறைவனால் வகுத்தளிக்கப் பெற்ற ஒழுக்க நெறியே சமயம் ஆகும். உயிர்கள் தம் முயற்சியால் சென்றடைய வொண்ணாத வீடுபேற் றின்பமாகிய 'திரு' வினை வழங்கும் சிறப்புடையதாகலின் இதனைத் திருநெறியெனவும், சாதி மத வேறுபாடின்றி உலக மக்கள் எல்லோரும் அன்பினால் ஒருங்கு கூடிச் செல்லுதற்குரிய விரிவுடைய வழியாதலின் பெருநெறி எனவும், சத்து (உள்ளது) என்னும் முழுமுதற் பொருளாகிய இறைவன்பாற் கொண்டு செலுத்தும் நன்னெறியாதலின் சன்மார்க்க மெனவும் வழங்கப் பெறுவதாயிற்று. சத்+மார்க்கம் = சன்மார்க்க மெனத்திரிந்து வழங்குதல் தமிழ் மரபு. சத்து = உள்ளது - என்றது என்றும் மாறாதுள்ளதாகிய முழுமுதற்கடவுளை.

ஒர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

(திருக்குறள்-357)

எனவரும் திருக்குறளில் எல்லாம் வல்ல இறைவனை 'உள்ளது' என்ற சொல்லால் திருவள்ளுவர் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். தத்தம் உணர்வு கொண்டு மக்களால் வகுத்துரைக்கப்படும் சமயங்கள் யாவும் அவரவர்தம் விருப்பு வெறுப்புகட் கேற்ப மாறுபடுதல் இயல்பு. வேண்டுதல்-வேண்டாமை இல்லானாகிய இறைவனால் எல்லாவுயிர்களும் அன்பினால் ஒருங்கு கூடி உய்திபெறுதல் வேண்டு மென்னும் பொதுநோக்குடன் வகுத்தருளிய ஒழுக்க நெறியே உண்மை நெறியாகிய சன்மார்க்கமாகும்.