பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173


இறைவனை ஆண்டவனாகவும் உயிராகிய தன்னை அம் முதல்வனது அடிமையாகவும் எண்ணி அன்பினால் வழிபடும் நெறியினைத் தாச மார்க்கம் எனவும், எல்லாம் வல்ல ஆண்டவனைத் தந்தையாகவும் தன்னை அம்முதல்வனது மைந்தனாவும் கருதி அன்பு செலுத்தும் நெறியினைச் சற்புத்திர மார்க்கமெனவும், இறைவனை ஆருயிர்த் தோழனாகக் கொண்டு வழிபடும் முறையினைச் சக மார்க்கமெனவும், இறைவனை ஆருயிர்க் காதலனாகவும். அவனது அருளார் இன்பத்தினை விரும்பி நிற்கும் ஆன்மாவாகிய தன்னைக் காதலியாகவும் கொண்டு போற்றும் முறையினைச் சன்மார்க்க மெனவும் வழங்குதல் சைவசமய மரபு. இந்நெறிகள் நான்கினையும் முறையே, தொண்டு நெறி, மகன்மை நெறி, தோழமை நெறி, அகத்திணை நெறி எனத் தமிழில் வழங்குதல் ஏற்புடையதாகும். மேற்குறித்த நால்வகை மார்க்கங்களையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பெயர்களால் வழங்குதலே பெருவழக்காகும்.

சரியை முதலாக மேற் கூறப்பட்ட நால்வகை நெறிகளும். ஒன்றின் ஒன்று தொடர்புடையனவாய்ச் சத்தாகிய முழுமுதற் பொருளிடத்தே உயிர்களைச் சேர்ப்பிக்கும் நெறிகளாதலின் இந்நான்கினையுமே சன்மார்க்கமென்ற சொல்லால் வழங்குதல் திருமூல நாயனார், தாயுமானார் அருட்பிரகாச வள்ளலார் ஆகிய திருவருட் சான்றோர் அனைவருக்கும் ஒத்த முடிபாகும்.

விரும்பும் சரியை முதல் மெய்ஞானம் நான்கும்
அரும்பு மலர் காய் கனிபோல் அன்றோ பராபரமே

(தாயு-பா- 157)

எனவரும் பாடலில் நால்வகை நெறிகளையும் மெய்ஞ் ஞானம் நான்கும் எனத் தாயுமான அடிகள் குறித்துள்ள