பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175


உள்ளது; என்றது எக்காலத்தும் மாறாது உள்ள முழுமுதற் பொருளாகிய இறைவனை. மார்க்கம்-நெறி. இறைவன் அருளிய ஞானநன்னெறியாகிய இந்நெறி குருவழியாக உபதேச முறையிற் பெறுதற்குரியது என்பார்; 'உய்ய வகுத்த குருநெறி' என்றார். சன்மார்க்கமாகிய சிவநெறி, வையத்து வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுதலாகிய சிவமாந் தன்மைப் பெருவாழ்வைப் பெற்று இன்புறுதற் பொருட்டு இறைவனால், வகுத்தருளிச் செய்யப்பெற்றது என்பார், தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள்ளார்க்கு வகுத்து வைத்தானே என்றார் திருமூலர். 'வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்' (50) என வரும் திருக்குறள் இங்கு நினைத்தற்குரியது.

'பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி' எனத் திருவள்ளுவர் கூறிய ஒழுக்க நெறியினையே 'குருநெறி' எனவும், சிவநெறி எனவும் சன்மார்க்கம் எனவும் திருமூலர் குறித்துள்ளமை காணலாம் சிவநெறிச் செல்வர்களால் மேற்கொள்ளப் பெற்றுவரும் சன்மார்க்க நெறியானது சமயாதீதப் பழம்பொருளாகிய சிவத்தையே வழிபடும் உறுதிப்பாடுடையது ஆதலின் எல்லாச் சமயத்தாராலும் வழிபடப் பெறும் முழுமுதற் பொருள் ஒன்றே என்னும் பொதுமையுணர்வு இந்நெறியிலே உருப்பெற்று வளர்வதாயிற்று.

சைவ சமயத்தார் மேற்கொண்ட சன்மார்க்க நெறியின் பயனாக எல்லாச் சமயங்களையும் ஒப்பநோக்கும் பொதுமை யுணர்வு தமிழகத்தில் உருப்பெற்று நிலவுவதாயிற்று.