பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி உலகம் உய்ய வகுத்த தெய்வச் சிவநெறியாகிய சன்மார்க்க நெறியில் நின்ற திருமூலர் 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' (2104) என்ற திருமந்திரப் பாடலில் இத்தகைய சமயப் பொதுமையைப் புலப்படுத்தியுள்ளார்.

சிவயோகியாராகிய திருமூலதேவரைத் தொடர்ந்து, பின்வந்த தமிழ் நாட்டுச் சித்தர்கள் சமயங்கட்கிடையே ஒற்றுமையுணர்வை வளர்க்கும் நோக்குடன் சமயப் பொதுமையுணர்வாகிய சமரசவுணர்வினைத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தி வந்துள்ளார்கள். இவ்வாறு தமிழகச் சித்தர்களால் அறிவுறுத்தப் பெற்ற சமரச நெறியினை 'வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை' (சித்தர் கணம்-1-10) எனவும், 'சமயங்கடந்த மோன சமரசம்' (சின்மயானந்த குரு-4) எனவும் தாயுமானார் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.

உலகாயத முதல் சைவ சித்தாந்தம் முடிவாக, மக்களால் மேற்கொள்ளப் பெற்றுவரும் எல்லாச் சமயங்களும், உலக முதல்வனாகிய இறைவனால் மன்னுயிர்கள் உய்தற்பொருட்டு அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்பப் படிப்படியாகத் தோற்றுவிக்கப் பெற்றனவே என்பர் பெரியோர்.

இவ்வாறு மக்களது பக்குவ நிலைக்கேற்பக் கொள்கைகளால் வேறுபட்ட பல்வேறு சமயங்களையும் படைத்தருளிய இறைவனே, மக்கள் தம்முள் முரண்பட்டு இகல் கொள்ளாதபடி இச்சமயங்கள் எல்லாவற்றையும் ஒப்பநோக்கும் நல்லுணர்வினை மக்களுக்கு உணர்த்தவல்ல சமயங்கடந்த சமரசநெறியினையும் வகுத்தருளினான், இவ்வுண்மை,