பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183


சிக்ஷை, சோதிட முதலிய ஆறங்கங்களும் தன்கண் அடங்க, படிமுறையே நற்பொருள்களை யறிவுறுத்தி ஞான வடிவமாகிய மோனமுடியைச் சென்னியிற் சூட்டி அரசிருக்கையில் அமர்ந்திருப்பதாகும். இத்தகைய வைதிக சைவம், ஐயோ! மிகவும் அழகியதாகும்.

சைவசமயச் சான்றோர்களால் ஞான நன்னெறியாக வகுத்துரைக்கப் பெற்றது, எல்லாச் சமய நெறிகளையும் தனக்கு அங்கமாகக் கொண்ட சமயங்கடந்த மோன நிலையாகிய சன்மார்க்க நெறியாகும். இந்நெறி அணிமா முதலிய எண்வகைச் சித்திகள் கைவரப் பெற்ற சித்தர் கட்கும், பேசாஅநுபூதி பெற்ற மாதவச் செல்வர்களுக்கும், இந்திரன் முதலிய பதவிகளை வேண்டிப் பெற்றவர்கட்கும் தாயகமாகத் திகழுந் தன்மையது. இங்கனம் இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மை நலங்களையும் வேண்டியோர்க்கு வழிவழி நின்று உதவும் திறத்தில் கற்பகத்தருப் போன்று இறைவனது திருவருளின் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுதற்குப் பொருந்திய நெறியே இச் சன்மார்க்கநெறியாதலின் இதுபோன்று அதிசயம் விளைப்பதொரு சமயநெறி பிறிதொன்றுமில்லை.

இத்தகைய சன்மார்க்க மென்னும் ஞானநெறியின் பொருளும் எல்லாச் சமயங்களிலும் மேம்பட்டு விளங்கும் சைவசமயத்து உண்மைகளாகிய குறியீட்டுப் பொருளும் பிரிவற ஒரு பொருளேயாகித் தோன்றுவதால் சமயநெறியும் சமயநெறியில் அடையும் பயனும், இச்சமயத்தில் இயைந்து தோன்றுவது போன்றதொரு ஒற்றுமைத் தன்மை பல்வேறு சமயநெறிகளில் எதனிலும் யாம் கண்டதில்லை. சொல்லால் வெளியிட்டுக் கூறுதற்கு அரிய தில்லையம்பலத்தில் நாம் பார்த்தபோது, அங்கு எந்தச்