பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188


'எல்லாம் வெளியே' எனத் தாயுமானாரும் 'விண்ணாயகன் கூத்து வெட்டவெளியே திளைத்து' எனச் சேக்கிழாரடிகளும் கூறிய பொருளுரைகளுக்கு இலக்கிய மாகத் திகழ்தல் காணலாம்.

இது காறும் எடுத்துக் காட்டியவற்றால் தில்லைப் பொதுவினில் நிகழும் திருச்சிற்றம்பல வழிபாடு சைவ சமயத்தார் மட்டுமின்றி எல்லாச் சமயத்தாரும், ஆன்ம நேய ஒருமைப்பாடுடையராய்ச் சமயாதீதப் பழம் பொருளாய சிவபரம்பொருளை அறிவுப்பெருவெளியில் ஒளிப்பிழம்பாகக் கண்டு போற்றும், சமயங்கடந்த சமரச சன்மார்க்க வழிபாடாக அமைந்துள்ளமை நன்கு துணியப்படும்.

திருமூலநாயனார் முதல் தாயுமானார் ஈறாக உள்ள செந்தமிழ்ச் சான்றோர் பலரும் அறிவுறுத்திய சமரச் சன்மார்க்க ஒளிவழிபாட்டினை உலகமுழுதும் பரப்புதல் வேண்டும் எனத் திருவுளங் கொண்ட அருட்பிரகாச வள்ளலார், சாதிமத வேறுபாடின்றி மக்களனைவரும் ஒருங்கு சென்று வழிபடுதற்குரிய பொதுமைத் திருவருள் நிலையமாகப் பார்வதிபுரம் என்னும் வடலூரில் சத்திய ஞானசபையைத் கி.பி. 1872 இல் தோற்றுவித்தருளினார்.

வடலூரில் அருட்பிரகாச வள்ளலாரால் நிறுவப் பெற்ற சத்தியஞானசபையானது சிதம்பரத்தில் ஞான ஆகாசமாகத்திகழும் திருச்சிற்றம்பலமாகிய சிற்சபையின் அமைப்பினை யுடையதாகும்.

தில்லையம்பலத்திற் கூத்தப் பெருமான் எழுந்தருளிய பீடத்திற்கு மேற்கே சிதாகாசப் பெருவெளியாகிய அருவத்தானமாகத் திகழ்வது சிதம்பர ரகசியம். இது ஞானவெளியென்பதனை அன்பர் பலரும் நன்குணர்வர்.