பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192


எனவரும் கண்ணியில் இராமலிங்க வள்ளலார் விளக்கிய நுட்பம் கூர்ந்துணரத் தகுவதாகும். தில்லைச் சிற்றம்பலத்தில் அமைக்கப் பெற்றுள்ள திரையானது ஒன்றே யாயினும் அதன் முன்பக்கம் கறுப்பாகவும் பின்பக்கம் சிவப்பாகவும் அமைந்துள்ளது. இத்திறத்தினைக் கூர்ந்து நோக்குங்கால் திரையின் முன்பக்கமுள்ள கருமைநிறம் ஆதிசத்தியாகிய மறைப்புச்சத்தியையும் பின்பக்கமுள்ள சிவப்பு நிறம் ஆன்மாக்கள் சிவனையடைதற்குத் துணை புரிவதாகிய திருவருட்சத்தியையும் குறித்துள்ளமை நன்கு புலனாதல் அறியலாம்.

மேற்குறித்த கறுப்பும் சிவப்புமாகிய இருவகை நிறங்களுக்குள்ளேயே எழுவகை நிறங்களும் அடங்கும் என்பதனை உணர்த்த எண்ணிய அருட்பிரகாச வள்ளலார், ஆன்மாவின் அறிவினை மறைத்துள்ள மறைப்பு நிலைகளை வகைப்படுத்தி உணர்த்தும் முறையில் 1. கரும்பெருந்திரை, 2. நீலப் பெருந்திரை, 3. பச்சைத்திரை, 4. செம்மைத்திரை, 5. பொன்மைத் திரை, 6. வெண்மைத்திரை, 7. கலப்புத்திரை என ஏழுதிரைகளாகப் பகுத்துக் கூறியுள்ளார் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். அருட்பெருஞ்சோதியை ஆன்மா காணவொண்ணாதபடி மறைத்து நிற்கும் மேற் குறித்த ஏழு திரைகளேயன்றி விடயநிலைகளையும் தத்துவநிலைகளையும் ஆன்மா உள்ளவாறு காண வொண்ணாதபடி தனித்தனி மறைக்கும் வெவ்வேறு திரைகளும் உளவென்பதும் அவையனைத்தும் முற்குறித்த ஏழு பெருந்திரைகளிலேயே அடங்கிவிடும் என்பதும் வள்ளலார் கருத்தாகும். இந்நுட்பம்,