பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195


பாருடைய கண்கள் அவ்வாகாசத்துடன் கலந்து நின்று காணுந்தன்மைய அல்ல' (தகராலய ரகசியம்-16) எனவும் தவத்திரு பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இறைவனை ஆன்மா காண வொண்ணாதவாறு மறைத்து நிற்கும் ஏழு திரைகளைப்பற்றித் தந்துள்ள பிறிதொரு விளக்கம் இங்குச் சிந்தித்து உணர்தற்குரிய தாகும்.

இச்சபையைத் தோற்றுவித்ததற்கு நிலைக்களமாகிய சமரச சன்மார்க்கம் என்னும் பொதுநெறி சைவசமயச் சான்றோர்களால் வளர்க்கப் பெற்று வந்ததாயினும், அதனைத் தோற்றுவித்து வளர்த்து பெருமக்கள் விரிந்த மனமும் நிறைந்த அருட்குணமும் உடையவர்களாதலால் தாம் மேற்கொண்டு ஒழுகிய சன்மார்க்க நெறி 'சைவ சமயத்துக்கே உரியது' என்ற எல்லையில் அமைந்து விடாது எல்லாச் சமயத்தார்களையும் அன்பினால் தழுவிக் கொள்வதாய் உலகமக்கள் எல்லோரும் உய்தி பெறுதற்கேற்ற விதியுடைய பெருநெறியாய் விளங்குதல் வேண்டும் என்ற குறிக்கோளுடன் அந்நெறியினை எல்லா மக்களும் பின்பற்றி ஒழுகுதற்கேற்ற பொதுநெறியாக (சமயங் கடந்தமோன சமரச நெறியாக) அமைத்து உதவினார்கள்.

19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருட்பிரகாச வள்ளலார், தம் காலத்தில் சாதிசமய வேறுபாடுகளால் மக்கள், பல்வேறு பிரிவினராய் ஒற்றுமையின்றி அயலவர் ஆட்சியுள்பட்டு உரிமையிழந்தும், பசி, பிணி, பகை என்பனவற்றால் அல்லற்பட்டும் வருந்திய அவல நிலையைக் கண்டு பெரிதும் வருந்தினார். இரக்கமே உருவாகிய அவர் இறைவனது திருவருளை இடைவிடாது