பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


உயிரிரக்கத்திற்கும் சமரச சன்மார்க்கம் என்னும் பொது நெறியத்திற்கும் எதிரான எதனையும் சாதி மத சமய சாத்திரம் எதனையும் அதிரச்சாடித் தூக்கி எடுத்தெறியும் வன்னடைப் புரட்சியை வடலூர்ப்பாக்களில் கடலோர அலைபோல் காண்கின்றோம். வள்ளலார் பாடியவை என்பதனால் அருட்பா முழுமைக்கும் ஒத்த மதிப்பு உண்டென்றாலும் பிள்ளைப் பெருவிண்ணப்பம், நடராசபதிமாலை. சுத்தசிவநிலை, உலகர்க்கு உய்வகை, புனிதகுலம் பெறுதல், சமாதி, சன்மார்க்க உலகநிலை என வரும் செய்யுட் பகுதிகள் வள்ளலாரின் தனிச்சிந்தனை வளர்ச்சிகள். இவ்வளர்ச்சியின்றேல், எத்துணையோ தெய்வப்பாடல்களைப் பாடியோருள் ஒரு பொது வடியவ வராக இராமலிங்கர் அடங்கியிருப்பர்.

வள்ளலாரின் வடலூர் வாழ்க்கை மக்கள் நோக்காயிற்று, பைந்நிலப் பார்வையாயிற்று; உயிர்த் தொண்டாயிற்று, இறைவனைத் தன் முத்திக்கு வழிகேட்ட முன்னோரினும் வேறாக, இறைமையை உயிர்ப்பொது நலத்துக்கு வழிப்படுத்தினார் இராமலிங்கர். ஏனை அருளாளர்கள் போலன்றி, சாலை சங்கம் சபை கண்டும் கொடி நாட்டியும் யாவரும் வழிபடும் ஒளிக்கோயில் அமைத்தும் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை யெனத் தனிமந்திரம் ஒதியும் தன்கொள்கைக்குச் செயல் வழிகளைத் தானே கண்ட இயக்காளர் இராமலிங்கனார்.

"பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
முத்தி பெற்றிடவும் பெற்றிலேன்
உரியதோர் இச்சை எனக்கிலை என்தன்
உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்"

"ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில்
ஆடலே யன்றி ஒர்விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக்
கருத் தெனக் கில்லை"