பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205


பெறச் செய்து அவர் உள்ளத்தில் கலந்திருந்து, 'என் அன்புமகனே, எமன் எனும் அவன் இனி நின்னை அணுகுதல் இல்லை. ஆகவே இறவாத பெருநெறியில் இளைப்பற வாழ்வாயாக' எனத் தன் அருட் சார்பினை நல்கி அருளினான் என்பதும், அவனது திருவருளைச் சார்பாகக் கொண்டே 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ என்னும் திருவருட் சமுதாய அமைப்பு வள்ளலாரால் நிறுவப் பெற்றதென்பதும் ஆகியவற்றைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது:

அமரரும் முனிவரும் அதிசயித்திடவே
     அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவநெறிக் கேற்றி என்றனையே
     காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே
     எய்ப்பற வாழ்க என்றியம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
     தனிநடராசஎன் சற்குரு மணியே

(3702)

எனவரும் திருவருட்பாவாகும்.

சமரச சன்மார்க்க நெறியினை மேற்கொண்டு எல்லாம் வல்ல இறைவனே தன் ஆருயிர்த் தலைவனாகவும், தம்மை அவனது அருளாரின்பத்தினை வேண்டி நிற்கும் காதலியாகவும் கொண்டு போற்றும் அடிகளார், நாயகனால் தாம்பெற்ற பேரின்பப் பெருவாழ்வை வெளியிட்டுரைப்பதாக அமைந்தது,