பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209


குறிக்கப்படாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் ஜோதியராகி விளங்குகின்ற தேவரீரது தனிப்பெருந் தன்மைக்கு, மெய்யறிவுடையோரால் விதிக்கப்பட்ட வேதாக மங்களும், பெருந்தகை வாசகத்தைப் பெறாது சிறுதகை வாசகங்களைப் பெற்றுத் திகைப்படைகின்றன என்றால், மலத்திற் புழுத்த புழுவினும் சிறியேமாகிய யாங்கள் திருச்சமுகத்தில் விண்ணப்பித்தற்கு உரிய பெருந்தகை வாசகத்தை எவ்வாறு அறிவோம்! எங்ஙனம் செய்வோம்! ஆதலின் கருணாநிதியாகிய கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி எங்களைக் காத்தருளல் வேண்டும்.

தாயினும் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே அஞ்ஞான இருளில், அஞ்ஞான உருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்தில் பயின்று ஏதும் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங்கருணையால் பவுதிக உடம்பில் சிறிது அறிவு தோற்றிவிடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும் அது கொண்டு அறிவே வடிவமாய், அறிவே உருவாய், அறிவே பொறியாய், அறிவேமனமாய், அறிவே அறிவாய், அறிவே அனுபவமாய் அனுபவிக்கத் தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே அறிவாய், குற்றமே அனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமூகத்தின் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய் குற்றமே குறிக்கும் என்று அறிந்தோமாயினும் குற்றங் குறியாதவகை விண்ணப்பம் செய்வதற்கு ஒருவாற்றானும் உணர்ச்சியில்லோ மாதலில், துணிவு கொண்டு விண்ணப்பிக்கின்றோம். குற்றங்களையே குணங்களாக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கு இயற்கையாதலின் இவ்விண்ணப்பங்களில் குற்றங்குறியாது கடைக்கணித் தருளிக் கருணை செய்தல் வேண்டும்.