பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216


ஓதுதலால் பார்ப்பனர் உயர்ந்தோர் என, ஒரு சிலரால் உயர்த்திக் கூறப்படினும் அன்னோர் ஒழுக்கத்தில் வழுவுவராயின் இழிந்த பிறப்பினராகவே கருதப்படுவரெனவும், கல்லாதார், உயர்ந்த சாதியெனக் கருதப்படும் குடியிற் பிறந்தாராயினும் அவர்களால், தாழ்ந்தகுலம் எனக் கருதப்படும் குடியிற்பிறந்து கல்வியினாற் சிறப்படைந்த மக்களது பெருமையை ஒருசிறிதும் பெற்றா ரல்லரெனவும், மக்கள் வாழ்விற்பெறும் பெருமை யென்பது அவர்கள் பிறந்த குடிப்பிறப்பாலும் செல்வ அளவாலும் வருவதன்று எனவும் தாமியற்றிய உலகப் பொது மறையில் தெளிவாக வற்புறுத்திக் கூறியுள்ளார். திருவள்ளுவர் காலத்தில் சமுதாய வாழ்வில் சாதிப் பிரிவு வேரூன்றத் தொடங்கியமையும் அதற்குத் திருவள்ளுவர் முதலிய சான்றோர்கள் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது என வற்புறுத்தினமையும் மேலெடுத்துக் காட்டிய திருக்குறட் கருத்துக்களால் நன்கு துணியப்படும்.

இதற்குரிய குறட்பாக்கள்:

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

133

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்(பு) ஒழுக்கம்குன்றக் கெடும்.

134

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றாரனைத்திலர் பாடு.

409

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

973

என்பனவாகும்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனக் கணியன்பூங்குன்றனார் பாடிய புறநானுாற்றுப் பாடல், அன்பினால்