பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217


ஒன்றுபட்டு வாழ்தற்குரிய மக்களினத்தை நிற வேற்றுமை காரணமாகப் பல்வேறு சாதிகளாகப் பகுத்து அவர்தம் ஒற்றுமையைச் சிதைக்கும் இத்தீய பழக்கத்தினை அறவே ஒழித்து, எல்லா மக்களும் ஒரு குலத்தவரே என்னும் மெய்ம்மையை அறிவுறுத்துவதாகும். மக்கள் அனைவரும் ஒரு குலத்தவரேயென்னும் இவ்வுண்மையை அடிப்படை யாகக்கொண்டு எல்லோராலும் வழிபடப்படும் தெய்வமும் ஒன்றே என்னும் சமயஒருமைப்பாட்டினையும் இணைத்துக் கூறும் நெறியிலமைந்தது,

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”

(2104)

என்னும் திருமந்திரமாகும்.

சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரும் திருமூல தேவநாயனாரும் வற்புறுத்திய வண்ணம் உலகிற் பல்வேறு இடங்களில் பல்வேறு நிலையினராக வாழும் எல்லா மக்களையும் ஒரே குடும்பத்தினராக மதித்து அன்பு செய்யும் மெய்யுணர்வுக் கொள்கையானது சைவத் திருமுறை ஆசிரியர்கள் எல்லோரிடத்தும் சிறப்பாக அமைந்திருந்தது என்பது அவர்கள் பாடியருளிய திருப்பாடல்களால் நன்கு புலனாகும்.

குலச்சிறை நாயனார் சிவனடிக்குத் தொண்டுபட்ட அடியார்களைச் சாதிவேறுபாடு கருதாமல் ஒரே குலத் தினராக மதித்துப் போற்றிய செய்தியினை,

'நாடவர் நாடறிகின்ற குலமிலராகக் குலமதுண்
     டாகத் தவம்பணி குலச்சிறை'

(3-120-6)

எனவரும் தொடரில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் உளமுவந்து பாராட்டுகின்றார்,