பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


"சாகாநிலைஎன்னும் ஒருநிலையுண்டு என்பர். எனது ஆராய்ச்சியில் விளங்கிய உண்மைகளுள் ஒன்று. அது குறித்து எனக்கு எவ்வித ஐயமாதல் திரிபாதல் மயக்க மாதல் இல்லை. அந்நிலையில் எனக்கு உறுதியுண்டு. நமது நாட்டு ஆன்றோர் ஒரு முகமாக அறிவுறுத்திய அப்பெருநிலை இப்பொழுது மேல்நாட்டறிஞர்பவராலும் உறுதிசெய்யப் பட்டு வருகிறது."

என்று விளக்கும் திரு.வி.க. இப்பிறவியிலேயே தான் அந்நிலையை அடைய வேண்டும் என அவாவினார். வள்ளலாருக்கு முன் விளங்கிய பெரியோர்கள் எல்லாம் பிறவாமை வேண்டினர் எனவும், வள்ளலார் இறவாமை வேண்டினார் எனவும், இப்புழுக் குரம்பையே சுத்த சன்மார்க்கத் தொடர்பினால் நித்தியமாகும் எனக் கண்டார் எனவும் அருட்பாவில் முழுமைத் தோய்வுடைய ஊரனடிகள் தெளிவுபடுத்துவர். 'கருவுற்று வந்தால் தான் புதுப் பிறப்பு என்பதல்ல புதுப்பிறப்பின் பயனை ஈண்டு இவ்வுடலுடன் பெறுவதே உயரிய பிறப்பு' என்று சுருங்கச் சொல்லுவர் குங்கிலியசண்முகனார், சாங்கை மருத்துவக்கல்லுாரி மூப்பு வாரா மருந்தினைக் கண்டுபிடித்திருப்பதாகவும் அதனையுண்டவர் வெண்ணரை நீங்கி மீண்டும் கருமயிர் பெற்றாகவும் மூப்புக்கு உரிய நலிவுகள் இம்மருந்தினால் குணமடைவதாகவும் ஒரு சீனச் செய்தி வெளியாயிற்று, ஆதலின் திருமூலர், தாயுமானவர், இராமலிங்கனார் சித்தர்கள் சொல்லிவரும் ஒளியுடம்பு எதிர்காலத்தில் இன்றும் உறுதிப்படலாம். விண்வெளியாராய்ச்சி முனைப்பாக நடக்கும் அறிவியற் காலம் இது. அங்குச் செல்லுநர் மானிடவுடம்போடு சென்றாலும் அவ்வுடம்பும் பல பதம் பெறவேண்டும். கனந்தோன்றா மென்மையாக வேண்டும் காற்றுப்போல இயங்க வேண்டும். அதற்குத்தக மனமும் அறிவும் பயிற்சி பெற வேண்டும்.