பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219


பெருமையைப் போற்றித் தம்மோடு ஒத்த குலத்தவராகவே மதித்துப் போற்றுதல் வேண்டுமென்பது திருஞானசம்பந்தப் பிள்ளையாரது கொள்கையென்பதும் அக்கொள்கையை வரவேற்று அதன்படி நடந்தவர் திருநீலநக்கர் என்பதும், இவ்வாறு பண்டைக் குலத்தின் அமைப்பினைப் பொருட்படுத்தாது தொண்டர்களைப் பேரன்பின் திறத்தால் நன்கு மதித்துப்பேணுதலே மெய்யுணர்ந்தாரது கடமையாகுமெனக் கொண்டவர் திருத்தொண்டர் புராண ஆசிரியர் சேக்கிழார் நாயனாரென்பதும் மேற்குறித்த செய்தியால் நன்கு தெளியப்படும்.

தமிழகத்தில் தம்காலத்தில் வேரூன்றியிருந்த சாதி வேறுபாட்டின் தீமையை உணர்ந்து அதனைக் கண்டித்த அருளாளர்களுள் திருநாவுக்கரசரும் ஒருவர். கேட்டினை விளைவிப்பதாகிய சாதி உயர்வும் சுற்றத்தொடர்பும் ஏனைய பாசங்களும் ஒழிந்து மிகவும் மேலான பேரின்ப வாழ்வினையடைய வேண்டுமென்ற விருப்புடையார்க்குத் திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள பெருமான் தானே எதிர்ப்பட்டு அருள்புரிவார். ஆகவே, இளமை பொருந்திய நெஞ்சமே! அம்முதல்வனைப் பேரன்பினால் நினைந்து போற்றுவாயாக என நெஞ்சிற்கு அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது,

நேசமாகி நினைமட நெஞ்சமே
நாசமாய குலநலஞ் சுற்றங்கள்
பாசமற்றுப் பராபர ஆனந்த
ஆசையுற்றிடும் ஆனைக்கா அண்ணலே.

(அப்பர் 5-31-9)

எனவரும் திருக்குறுந்தொகையாகும்.

மக்களினம் உயர்வடைதற்குரிய கல்வியறிவு ஒழுக்கங்களைப் பாராட்டாது போலியாகிய தம் சாதியின்