பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

227


மையும், தாம் பாடிய திருப்பதிகத் திருக்கடைக்காப்பில் வனப்பகை சிங்கடி என்னும் அவ்விருபெண்களுக்குத் தந்தையாகத் தம்மைக் குறிப்பிட்டுள்ளமையும் ஆகிய செய்திகள் சமய வாழ்வில் மட்டுமின்றிச் சமுதாய வாழ்விலும் சாதி வேற்றுமையை அறவே களைந்தவர் நம்பியாரூரர் என்னும் மெய்ம்மையினை நன்கு வற்புறுத்தும் நிகழ்ச்சிகளாகும்.

நுண்ணறிவு வாய்க்கப்பெறாத மக்கள், எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்குமென நம் தமிழ் முன்னோர் கூறிய பொருளுரையினை உணராது, இடைக் காலத்தில் வந்து புகுந்த சாதி குலம் என்னும் போலி வேற்றுமைகளையே மெய்யென்றெண்ணித் தடுமாற்றம் அடைவாராயினர். அந்நிலையில் அருளாளர் பலர் தோன்றி இவ் வேற்றுமைகள் உண்மையாவன அல்ல எனவும் மக்களது வாழ்க்கைப் புணையினைக் கீழ்மேலாக ஈர்த்து அலைக்கும் இச்சுழியில் அகப்பட்டுத் தடுமாறாது இறைவனருளால் யான் எனது, என்னும் செருக்கின்றி எவ்வுயிர்களையும் ஒப்பமதித்து உய்தலே சான்றோர் கடனாமெனவும் அறிவுறுத்துவாராயினர். சாதி வேற்றுமையினைக்களைதல் வேண்டும் என அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதை குணம், பிறருருவம், யானெனதென்னுரை மாய்த்துக்
கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே

(திருவா. கண்ட.)

எனவரும் மாணிக்கவாசக சுவாமிகளின் மணிமொழி யாகும்.