பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228


அன்பினால் அளவளாவி மகிழவேண்டிய மக்கட் குலத்தாரைப் பிறப்பினால் மேல் கீழ் என்னும் வேற்றுமைக்கு உட்படுத்தி அல்லல் விளைவிக்கும் சாதி வேற்றுமையைப் போலவே பிற்காலத்தில் சமய வேற்றுமைகளும் பலவாகத் தோன்றி மக்களது ஒற்றுமையைச் சிதைப்பன ஆயின.

ஆகவே பொருளற்ற சாதி வேற்றுமையைப் போலவே பயனற்ற சமய வேற்றுமைகளும், மக்களது ஒற்றுமை வாழ்வுக்கு ஒவ்வாதனவாகிய பல்வேறு சமய சாத்திரங்களும் கண்டித்து ஒதுக்கத் தக்கன என்பதும், இத்தகைய வேற்றுமைகளுள் அகப்பட்டோர் தம்மைப் பேணுவாரின்றிப் பிறவிக் கடலில் வீழ்ந்து எண்ணில்லாத காலம் துன்புறுவர் என்பதும், இங்ஙனம் அவலக்கடலுட் கிடந்து அல்லற்படாதவாறு தம்மை ஆண்டு கொண்டருளியவன் எல்லாம் வல்ல இறைவன் என்பதும் ஆகிய உண்மைகளை அறிவுறுத்தி மகிழும் நிலையில் திருவாதவூரடிகள் அருளியது,

உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளுஞ்
செயலைப் பரவி நாம் தெள்ளேணங் கொட்டாமோ

(தெள்ளேணம் 17)

எனவரும் திருவாசகமாகும். இங்ஙனம் தமிழ் முன்னோராகிய சான்றோரனைவரும் மக்களது அன்பின் வழிப்பட்ட நல்வாழ்வுக்குத் தடையாகவுள்ள சாதி சமய சாத்திர வேறுபாடுகளைக் காலந்தோறும் கண்டித்து ஒதுக்கி வந்திருப்பினும் இவ்வேற்றுமைகள் யாவும் நீர்ப்பாசி போல் மீண்டும் மீண்டும் நாட்டில் நிலைபெற்று வருவனவாயின. இவ்வேற்றுமைகளால் ஒற்றுமையிழந்த