பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

முன்னையோரைக் காட்டிலும் சாகாநிலையுடம்பு என்ற கோட்பாட்டினை வள்ள ற்பெருமான் வெளிப் படையாகவும் அழுத்தமாகவும் ஆசைப்படும் படியும் பாடிவிட்டார் என்பது என் கருத்து.

'மரணமிலாப் பெருவாழ்வு வாழ்த்திடலாம் கண்டீர்
புனைந்துரையோ பொப்புகலேன் சத்தியஞ் செய்கின்றேன்.'
'இயற்றிதனைத் தடுத்திடலாம் என்னோடுஞ் சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே'
'செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்து மனம்
ஒத்தாராய் வாழ்க உவந்து'

என வழங்கும் பாடல்களில் சிவனுரை தன்னுரையாகவே வலியுறுத்துவர் இராமலிங்கர். துயில்வதுபோலப் புதையுங்கள்; எரியிற் சுடாதீர்கள்; சுடுவது கூடக் கொலை என்ற அளவுக்கு அருட்பா சென்றுவிட்டது. பரிசுச்சீட்டு வாங்கினார்க்கெல்லாம் முதற்பரிசு விழும் என்ற கதையா யிற்று. அறிஞர் ம. பொ. சி. சுட்டியதுபோல, அடிகள் எவ்வளவுக்கு எவ்வளவு உள்ளொளி பெற்றாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் உலகத்தாரால் புரிந்து கொள்ள முடியாதவராயினார். செத்தார் எழுதல் என்ற இயக்கநிலையை வள்ளலார் வெளிப்படுத்திய போது, கொஞ்சமேனும் உள்ளப்பக்குவப் பண்பாடு இன்றிப் பொதுமக்கள் சவங்களைக் கொண்டுவந்து எழுப்பித் தர மன்றாடினார்கள் என்று மன்பதையின் பேதைமையைக் கண்டிப்பர் ஆங்கிலியம் சண்முகனார்.