பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230


கொண்டு அவர்களது கல்வி நலம் பண்புநலம் முதலியவற்றைக் கண்டறிவார் ஒருவருமில்லை. வருணம், ஆசிரமம் ஆசாரம் முதலிய இவற்றின் பொய்ம்மையினை நீ அறிவுக்கண்ணைத் திறந்துகண்டு தெளிவாயாக என உயிர்க்குயிராகிய இறைவனே உள்நின்று உணர்த்த உணர்ந்த அருளாளர் இராமலிங்க வள்ளலாராவார். இவ்வுண்மை,

'நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
     நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவார் இலை நீ
     விழித்திதுபார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே'

(4174)

எனவரும் வள்ளலார் வாய்மொழியால் நன்கு தெளியப் படும்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என அன்பினால் ஒரு குடும்பத்தவராக ஒன்றிவாழ்தற்குரிய மக்கட் குலத்தாரை, இவர் இன்ன மதத்தினர் இன்னசாதியினர் எனப் பல்வேறு வகையினராகப் பிரித்து வேறுபடுத்துதற்குக் காரணமாயுள்ள சாதி மதங்கள் யாவும் பின் வந்தோராற் கற்பனை செய்துரைக்கப்பட்டனவேயன்றி மெய்ம்மையாவன அல்ல என்னும் இவ்வுண்மையை இறைவனருளால் இளம் பருவத்திலேயேயுணரப் பெற்றவர் அருட்பிரகாச வள்ளலார். இந்நுட்பம்,

'சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி'

(அகவல்)

எனவரும் அவரது வாய்மொழியால் இனிது புலனாதல் காணலாம்.