பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246


நிலையாமை என்னும் அதிகாரத்தில் வற்புறுத்திய திருவள்ளுவர், நம்முடைய உயிரை நாம் பெற்றுள்ள உடம்பினின்றும் பிரித்து மரணத்தை யுண்டாக்கும் கூற்றுவனையும் தவ வன்மையால் வெல்லுதல் கூடும் என்னும் உண்மையைக்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

(–269)

எனவரும் திருக்குறளில் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

யாவராலும் தடுக்க வொண்ணாத நிலையில் உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தெய்வ ஆற்றலே கூற்று என வழங்கப்படும் என்பார், 'மாற்றரும் கூற்றம்' என்றார் தொல்காப்பியர். இவ்வாறு யாவராலும் தடுக்க வொண்ணாத கூற்றுவனது ஆற்றலையும் தவ வலியால் மாற்றிவிடுதல் கூடுமென்பதே மேற்காட்டிய திருக்குறளின் கருத்தாகும். எல்லா வகையாலும் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதவராய் மன்னுயிர்களை அவை நிலைபெற்றுள்ள உடம்பினின்றும் நீக்குதலாகிய கொலைத் தொழிலைச் செய்யாது கொல்லாமை என்னும் நல்லறத்தை மேற்கொண்டு ஒழுகுவாரது வாழ்நாளின் மேல் காலமறிந்து உயிருண்ண வரும்கூற்று செல்லமாட்டாது என அறிவுறுத்துவது.

'கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது யிருண்ணும் கூற்று'

(-326)

என வரும் திருக்குறளாகும்.

கொல்லாமையை விரதமாக மேற்கொண்டொழுகுவானது வாழ்நாளின்மேல் உயிருண்ணும் கூற்று செல்லாது எனவே அவனுக்கு மரணமில்லை என்பதாம்.