பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

நேயவொருமைப்பாடு தெளிவாம். இரக்கச் செயலே அருட்பா வழங்கும் பேரறம் என உணர்வோமாக. தெய்வப் பாசுரங்களின் ஆழமும் கரையும் கண்ட சான்றோர் வெள்ளைவாரணனார் 'வறியோரது பசிப்பிணியை மாற்றுதலின் இன்றியமையாமையை எல்லோர் உள்ளத் திலும் நன்கு பதியும்படித் தெளிவாக வற்புறுத்திய அருளாளர் அருட்பிரகாச வள்ளலார் ஒருவரே 'எனச் சுட்டியிருப்பது நடுநிலைமை காட்டும் மதிப்பீடாகும்.

மேலே விளக்கியபடி. திருவருட்பாச் சிந்தனை என்று இப்பனுவல் தொன்று முதல் இன்று காணும் தமிழினம் போற்றிவளர்த்த வாழ்வுச்சிந்தனைகளின் அருட்பேழையாகும். நுண்போர்க் கருவிகளாலும், கொள்கை முனைப்புக்களாலும் இகல்வேகவுணர்ச்சிகளாலும் இப்பைஞ்நிலம் அழியுங்கொல் என்று கவலை மீதுாரும் இக்காலத்துக்கு, உலகவொருமைப்பாடு சாற்றும் அருட்பா உலகர் அனைவரும் கைக்கொள்ளத்தகும் பொருட்பா என்றால் மிகையன்று. இம்மறை தமிழ்மொழியில் இருப்பதால் உலகோர் அறியச் செய்தல் தமிழர் கடன்: தமிழகப் பல்கலைக் கழகங்களின் பொறுப்பு. திருக்குறள் போலத் திருவட்பா மறையும் பன்மொழியில் நடமாடும் பெருமை எய்துக. அதனால் உலகில் ஒருமை நாட்டம் வளரும்.

தந்தையார் வாழ்த்தாலும் சான்றோர்களின் உறவாலும் பதிப்புச்செம்மல் மெய்யப்பனாரின் ஆள் வினையாலும் மணிவாசகர் நூலகம் என்னும் ஆலமரம் வெற்றித்தழை செழித்துக் கிளைபெருக்கி விழுதுவிட்டு யாதும் ஊரே எனப்பரவித் தமிழ்நிழல் தருகின்றது. நூலொன்று வாராது நாளொன்று போகாது என்று சொல்லும் வண்ணம் எளிய இனிய உயரிய பல்துறை