பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252


தவச்செல்வர்களும் தாம் தாம் மேற்கொண்டொழுகும் நிலையில் தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி வென்றி யுடையராய் விளங்கினார்கள். இச்செய்தி,

மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும்

(தொல்-புறத்திணை-15)

எனவரும் தொல்காப்பியத் தொடரால் இனிது விளங்கும். அகத்தியமுனிவர் முதலியோர் 'அறிவர்' என்னும் பக்கத்தவர். 'தாபதர்' தவஞ்செய்வார் எனப்படுவோர். அவர்கள்-தவஞ் செய்வாரும், யோகஞ் செய்வாரும் என இருவகைப்படுவர். ஊண் நசையின்மை, நீர் நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய் வாளாமை என எட்டும் தவஞ் செய்வார்க்குரிய செயல்முறைகளாகும். முற்கூறிய இமயம் நியமம் முதலியன யோகம் செய்வார்க்குரியன. முக்காலமு முணர்ந்த அறிவரும், தவமும், யோகமும் செய்வாராகிய தாபதரும் சங்க காலத்தில் வாழ்ந்திருந்தனர் என்பது மேற்குறித்த தொல்காப்பியத் தொடராலும், அறிவன் வாகை, தாபத வாகை என்னும் புறத்திணைத் துறைகளிலமைந்த சங்கச் செய்யுட்களாலும் உய்த்துணரப்படும்.

ஓவத்தன்ன விடனுடை வரைப்பிற்
பாவையன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
கழைக்க ணெடுவரை யருவியாடிக்
கான யானை தந்த விறகிற்
கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே

(புறநாநூறு-251)