பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
ஒரு பகலெழுவ ரெய்தி யற்றே
வையமுந் தவமுந் துாக்கிற் றவத்துக்
கையவியனைத்து மாற்றா தாகலிற்
கைவிட்டனரே காதல ரதனால்
விட்டோரை விடாஅ டிருவே
விடாஅ தோரிவண் விடப்பட் டோரே

(புறநானூறு 358)

என வான்மீகியார் பாடிய பாடலாகும்.

இப்பாடற் பொருளை ஊன்றி நோக்குங்கால் உலக நிலையாமையையும், நிலையுடைய பெரும் பொருளை யடையச் செய்யும் தவத்தின் ஆற்றலையும் உணர்ந்து தவநிலையில் சென்ற பெருமக்கள் தமிழகத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பது நன்கு தெளியப்படும்.

"யோகிகளாய் உபாயங்களால் முக்காலமுணர்ந்த மாமூலர் முதலியோர், அறிவன் தேயத்து அனைநிலை வகையோரவர்; அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப் பக்கத்தராவர்" என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் பெருமை வாய்ந்த சிவயோகியராகிய திருமூல நாயனாரையும் அவர்தம் மாணாக்கர்களையும் குறித்ததெனக் கருத வேண்டியுள்ளது.

யாப்பருங்கலம் செய்யுளியல் புறநடைச் சூத்திர வுரையில் 'ஆரிடப்போலி” என்னும் செய்யுள் அமைப்பினை விளக்கக் கருதிய யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியர் 'இலை நலவாகினும்' (204) என்னும் முதற் குறிப்புடைய திருமந்திரத்தினை மூலர் வாக்கு எனக் குறித்துள்ளார். எனவே திருமூலர், தமிழ் நாட்டு முனிக் கணத்தைச் சேர்ந்தவர் என்பது நன்கு தெளியப்படும்.