பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255


திருமூலநாயனார் இந்நிலவுலகில் மூலன் உடம்புடன் நெடுங்காலம் சிவயோகத்தி லமர்ந்திருந்தார் என்பது 'ஒப்பில் எழுகோடியுக மிருந்தேனே' (திருமந்திரம் 74) எனவும், 'இருந்தேன் இக்காயத்தே எண்ணிலகோடி' (திரு-80) எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும் இக்காயத்தே என்று திருமூலர் சுட்டியது சிவயோகியாராகிய அவர், மூலன் என்னும் 'இடையன்' உடம்பிற் புகுந்து நிலைபெற்ற பின்னராதலின் திருமூலரால் 'இக்காயம்' எனச் சுட்டப்பட்ட உடம்பு மூலன் என்னும் ஆயனுடைய உடம்பு எனக் கொள்ளுதல் வேண்டும்.

திருமூலர் தம்முடன் நந்தியெம்பெருமான் பால் உபதேசம் பெற்றவர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்னும் நந்திகள் நால்வரையும், சிவயோக மாமுனி, மன்று தொழுத பதஞ்சலி, வியாக்ரமர், ஆகியவர்களையும் தம்மொடும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளார். (திருமந்திரம்-67)

திருமூலருடைய மாணாக்கர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன். உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் (திருமந்திரம்-69)

இந்நிலவுலகில் தாம் நெடுங்காலம் தங்கியிருந்த காரணத்தை விளக்கக் கருதிய திருமூலர் தம்முடைய மாணாக்கர்களாகிய இந்திரன்-மாலாங்கன் முதலியோரை நோக்கிக் கூறும் முறையில்

இருந்தவக் காரணங் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே

(திரு-75)