பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258


சுந்தரர் காலத்தில் வாழ்ந்த 'பெருமிழலைக் குறும்பர்' என்னும் பரமயோகி சுந்தரமூர்த்தி சுவாமிகளையே குருவாகக் கொண்டு சிவயோகம் பயின்று அதன் பயனாகச் சுந்தரர் நாளை கயிலை செல்ல இருக்கின்றார் என்பதனை உணர்ந்து அதற்கு முதல் நாளிலேயே சிவயோக நெறியாற் கயிலாயத்தை அடைந்தார் என்ற செய்தி திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது.

ஆன்மாக்கள் மும்மலப்பிணிப்பில் நின்றும் விடுபட்டு இறைவனது அருளால் பேரின்பப் பெரு வாழ்வினை அடைதற் பொருட்டு முத்தி நெறியை வகுத்தருளிய உமையொரு பாகனாகிய இறைவனே உலக உயிர்களின் இன்னலைப் போக்க விரும்பும் அருளாளர்க்கெனச் சித்தி நெறியையும் வகுத்துக் காட்டியுள்ளான் என்னும் இவ்வுண்மையை,

முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா
சித்தா சித்தித்திறங் காட்டும் சிவனே தேவர் சிங்கமே

(7-52-1)

என நம்பியாரூரர் நன்கு புலப்படுத்தியுள்ளார்.

சிவயோக நெறியில் ஒழுகுபவர்களாகிய சித்தர்கள் தாம் இவ்வுலகில் கொண்டுள்ள ஊனுடம்பினையே இறைவனின் திருவருளின் ஆற்றலால் என்றும் அழியாத ஒளியுடம்பாக்கி எவ்விடத்தும் எக்காலத்தும் தடையின்றிச் சென்று மன்னுயிர்களின் துன்பங்களைப் போக்கி யுய்விக்கவல்ல பேராற்றல் படைத்தோர் ஆவர். ஆகவே அவர்தம் ஒளியுடம்பு என்றும் அழியா நிலைமைத்தாகும் என்பர் பெரியோர்.