பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

259

 சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய சண்டேசர் தாம் செய்த சிவபூசையினைத் தடுத்த தந்தையின் கால்களைத் தடிந்த போது, இயல்பாகவே பாசங்கள் நீங்கிய சோதிப் பொருளாகிய சிவபெருமான் வெளிப்பட்டு 'நம் பொருட்டால் எடுத்த தாதையை விழஎறிந்தாய்; அடுத்த தாதை இனி உனக்கு நாம்' என்றருளி, அவரை யணைத்துத் தடவி அருள் செய்தான் என்றும், அங்ஙனம் இறைவனால் தீண்டப் பெற்றமையால் சண்டேசருடைய மாயாகாரியமாகிய உடம்பு ஒளியுடம்பாக மாற 'அந்த உடம்புடன்' அரனார்க்கு மகனார் ஆயினார் எனவும் கூறுவர் சேக்கிழார் பெருமான்.

செங்கண் விடையார் திருமலர்க்கை
     தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின்மேல்
     அளவின் றுயர்ந்த சிவமயமாய்ப்
பொங்கி எழுந்த திருவருளின்
     மூழ்கிப் பூமேல் அயன்முதலாம்
துங்க அமரர் துதி செய்யச்
     சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.

(பெரிய-1265)

எனவரும் பெரியபுராணப் பாடலை ஊன்றி நோக்குங்கால் நாம் பெற்றுள்ள மாயா காரியமாகிய ஊனுடம்பு எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் நோக்கத்தால் மாயையின் அசுத்தம் நீங்கிச் சிவமயமாய்த் தூய ஒளியுடம்பாகத் திகழும் என்பது சேக்கிழார் பெருமான் கருத்தாதல் நன்கு தெளியப்படும். பரிச வேதியானது, தான் திண்டிய பொருளைப் பொன்னாக மாற்றுதல் போல, இறைவனது அருளாகிய கை தீண்டப் பெற்றமையால் சேய்ஞலூர்ப் பிள்ளையாருடைய மாயா காரியமாகிய உடம்பும் கரணங்களும் தூய சிவ உடம்பும் சிவ