பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263


'உலகிற் சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர் தொழும் முதுகுன்று'

(1–12–6)

என ஆளுடையபிள்ளையார் திருமுதுகுன்றத்தில் இறைவனை வழிபட்டு வாழும் பெருந்தவச் செல்லர்களாகிய சித்தர்களைச் சிறப்பித்துரைக்கின்றார். இத்தலத்தில் வாழும் முனிவர்கள் சாவாமையையும் பிறவாமையையும் உடையராய் முதுமையடையாத திருமேனியுடன் கூடி முதுகுன்றப் பெருமானை வழிபட்டு மரணமிலாப் பெருவாழ்வு வாழ்கின்றார்கள் என்பது மேற்குறித்த சம்பந்தர் தேவாரத்தால் நன்கு புலனாகின்றது.

விரை மலரோன் செங்கண் மால் ஈசன் என்னும் மூவருமாய் முதல் ஒருவனாகிய இறைவன், திருமுதுகுன்றத்தில் தேவராயும், அசுரராயும், சித்தராயும் செழுமறைசேர் நாவராயும் நில முதல் ஐம்பூதங்களாகியும் கலந்து நின்று அருள் புரியும் திறத்தினை விளக்குவது,

'தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
நாவராயும் நண்ணு பாரும், விண், எரி, கால், நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவராயமுத லொருவன் மேயது முதுகுன்றே'

(1–53–1)

எனவரும் பாடல் ஆளுடையபிள்ளையார் அருளிய பாடலாகும்.

மூவா உடம்பினராகிய முனிவர்கள் திருமுதுகுன்றம் பெருமானை அன்பினால் நெஞ்சம் நெகிழ்ந்துருகிப் போற்றுத் திறத்தினையும், ஐம்புலன் செற்ற அவர்கள் மோனிகளாய்த் தனித்திருந்து தவம்புரியும் இயல்பினையும்,