பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270


ஊனுடம்பு இறைவனது அருளால் தூய ஒளியுடம்பாய் மாறிய நிலையில் இறைவனது திருவருள் ஒளியிற்கலந்து வீடு பெற்றார்கள் என்பது நன்கு தெளியப்படும்.

சிவயோக நெறியில் ஒழுகியவர் ஒளவையார். அவர் அருளிய குறள், வீடு பேற்று நெறியினை விளக்கும் முறையில் அமைந்த ஞான நூலாகும். துரிய நிலையில் நின்று சுடரொளிப் பிழம்பாகிய சோதிப் பொருளைக் காண உற்றார்க்கு, இறப்பும் பிறப்பும் அற்ற பேரின்ப நிலை வந்து எய்தும் எனவும், சிவயோக நிலையில் நின்று ஐம்பொறி வழிகளையடைத்துச் செம்பொருளை இடை விடாது தியானிக்கும் தவச்செல்வர்கள் நரைதிரையின்றித் துஞ்சலில்லா நல்லவுடம்புடன் திகழ்வார்கள் எனவும், அவர்களது உடம்புக்குச் சாவில்லை என்வும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தன,

துரியங்கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு

(218)

உரைசெயும் ஒசை உரைசெய்பவருக்கு
நரைதிரையில்லை நமன்.

(224)

வாக்குமனமுமிறந்த பொருள் காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம்.

(226)

அஞ்சு புலனின் வழியறிந்தார் பின்னை
துஞ்சுவ தில்லை யுடம்பு.

(232)

நாபி யுகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.

(233)

எனவரும் ஒளவை குறளாகும்.