பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271


இங்ஙனம் யோகநெறியில் செம்பொருளைச் சிந்தித்துணரும் பயிற்சியினால் இறவாப் பெருநிலையை அடைவதே சாகாக் கல்வியாகும் என்பது,

'சாகாதிருப்பதற்குத் தான் கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வருத்த நீ கல்மனமே'

எனவரும் இடைக்காட்டுச் சித்தர் பாடலால் இனிது புலனாகும்.

பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால்
இறவாதிருக்க மருந்துண்டுகாண் இது எப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பல வாணர் அடிக்கமலம்
மறவாதிருமனமே அதுதான் நன் மருந்துனக்கே.

எனப்பட்டினத்தாரும்,

'இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகி'

(திருப்புகழ்-228)

'மரணப்ரமாதம் நமக்கில்லையாம்'

(கந்தரலங்காரம்-21)

என அருணகிரிநாதரும் அருளிய பொருளுரைகள் இறைவனருளால் இவ்வுலகில் மரணமிலாப் பெருவாழ்வினை யடைந்தவர்கள் பெற்ற அநுபவநிலையைப் புலப்படுத்துவனவாகும்.

திருமூலர் வழிமரபில் வந்த மெளனகுருவின் அருளுபதேசம் பெற்றுச் சித்தர் கணங்களைக் கண்டு வழிபடும் பேறுபெற்ற தாயுமானப் பெருந்தகையார், சித்தர் நெறியின்படி, முத்தியிலும் மூவகைத் தேக சித்திகள் உண்டு எனவும், அத்தகைய சித்தியினைப் பெற்ற சித்தர்கள் எண்ணற்றவர்களாய் உள்ளார்கள் எனவும் கூறும் முறையில் அமைந்தது,