பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272


'முக்தியிலும் தேகம் இசை மூவிதமாம் சித்தி பெற்றோர்
எத்தனை பேர் என்றுரைப்ப தெந்தாய் பராபரமே'

(பராபரக்கண்ணி 209)

எனவரும் பராபரக் கண்ணியாகும். இதன்கண் மூவிதமாம் சித்தி என்பதற்கு, அருவசித்தி, உருவசித்தி, அருவுருவசித்தி ஆகிய மூன்று விதமாகிய சித்தி என விளக்கந்தருவர் அட்டாவதானம் பூவை கலியாண சுந்தர முதலியார். மேற்குறித்த மூவகைச் சித்திகளுள்,

'வெளியாய அருளில் விரவும் அன்பர் தேகம்
ஒளியாய்ப் பிறங்கியதும் உண்டோ பராபரமே'

(௸ 190)

என உருவசித்தியின் இயல்பினையும்,

'சத்தாகி நின்றோர் சடங்கள் இலிங்கமென
வைத்தாரும் உண்டோ! என் வாழ்வேபராபரமே'

(௸ 244)

என அருவுருவ சித்தியின் இயல்பினையும்,

'சித்த நிருவிகற்பஞ் சேர்ந்தார் உடல் தீபம்
வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும் பராபரமே'

(௸ 245)

என அருவசித்தியின் இயல்பினையும் தாயுமான அடிகள் விளக்கியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும். இங்கு குறிப்பிடப் பெற்ற மூவகைச் சித்திகளுள் நம்பியாரூரர் முத்திநிலை உருவசித்தியையும், நாவுக்கரசர் முத்திநிலை அருவுருவசித்தியினையும், மாணிக்கவாசகரது முத்திநிலை அருவசித்தியினை யும் குறிக்கும் எனக் கூறுதல் மரபு.