பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273


அருட்பிரகாசவள்ளலார் உலகில் பரப்ப எண்ணிய சமரச சுத்த சன்மார்க்க நெறியானது, சைவ சமயத்திற் கால்கொண்டு வளர்ந்தது என்பது திருவருட்பாவில் தோய்வுள்ள அனைவருக்கும் ஒத்த முடிவாகும்.

சைவ சமயமானது எல்லாப் பாசங்களையும் அறுத்து இறைவனுடைய திருவடியில் பிரிவற ஒன்றியிருத்தலாகிய ஈறிலாப் பேரின்பமாகிய முத்தி நெறியையும் உயிர்க்குயிராகிய இறைவனைச் சிவயோக நெறியில் நின்று வழிபட்டு எண்வகைச் சித்திகளும் கைவரப் பெற்று இப்பிறவியில் பெற்றுள்ள உடம்பினை அழியாத ஒளியுடம்பாக மாற்றிக் கொண்டு உலகில் எல்லா இடங்களுக்கும் நினைத்த அளவிலே விரைந்து சென்று மன்னுயிர்களின் துன்பம் துடைத்து இன்பம் நல்குதற்குரிய சித்தி நெறியையும் தன்பாற் கொண்டதாகும். எனவே தேவர், முனிவர், சித்தர், வேந்தர், முதலிய பல திறத்தவர்களும் இச்சமயத்தினை மேற்கொண்டு சித்தியையும், முத்தியையும் பெறுவாராயினர். இவ்வுண்மை,

விண்ணவர் இந்திரன் முதலோர் நாரதாதி
     விளங்கு சப்தரிஷிகள் கன வீணைவல்லோர்
எண்ணரிய சித்தர் மனுவாதி வேந்தர்
     இருக்காதி மறைமுனிவர் எல்லாம் இந்தக்
கண்ணகல் ஞாலம் மதிக்கத்தானே உள்ளங்
     கையில் நெல்லிக்கனிபோலக் காட்சியாகத்
திண்ணியநல் லறிவாலிச் சமயத்தன்றோ
     செப்பரிய சித்தி முத்தி சேர்ந்தாரென்றும்

(தாயுமா-ஆகா-சிதம்பரரகசியம்)

எனவரும் தாயுமான அடிகளார் வாய்மொழியால் இனிது புலனாகும்.