பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274


உலகில் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று மன்னுயிர்களுக்கு நலஞ் செய்தலையே தமது வாழ்க்கை நோக்கமாகக் கொள்ளும் சித்தி நெறியாளர்க்கும், 'எய்த்தேன், நாயேன் இனி இங்கிருக்கில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய், வாங்காய் வானோரறியா, மலர்ச்சேவடியானே' (திருவாசகம்) என உலக வாழ்வினை வெறுத்து இறைவன் திருவடியையே விரும்பிய முத்திநெறியாளர்க்கும் சைவ சமயமே சார்பாக உள்ளதென்பது மேற்குறித்த தாயுமானார் பாடலால் நன்கு விளங்கும்.

"அக அனுபவமே உண்மை, உபயவகையாகிய அபரமார்க்கம் தேகபூஷணாதி காமிய சித்தியைத்தரும். உண்மை, நீக்கமற்ற சொரூபஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயம் தவிர வேறு எவ்வித சமயங்களிலும் இல்லை. இந்து வேதாகமங்களில் மாத்திரம்தான் ஏமசித்தி, ஞான சித்தி முதலிய சித்திகளைச் சொல்லி இருக்கின்றது. மற்றைய எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும், சாகாக் கல்வியையும், சொல்லவில்லை" என வள்ளலார் கூறியிருப்பதும் இக்கருத்தை வலியுறுத்தல் காணலாம். சைவசமயத்துள் விரித்துரைக்கப்படும் முத்திநெறி, சித்தி நறி, என்னும் இருவகை நெறிகளுள், முத்திநெறியினைச் சாதனமாகவும், சித்திநெறியினை அதனாற் பெறத்தக்க முடிந்த பயனாகவும், மேற் கொண்டவர் அருட்பிரகாச வள்ளலார் ஆவர். இவ்வாறு தாம் மேற்கொள்ளுதற் கேற்ற உள்ளுணர்வைத் தூண்டியவர், அருட்பெருஞ்சோதி ஆண்டவரே என்பதனை,