பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276


முதலிய சிற்றுயிர்கள் படும் துன்பங்களையும் அகற்றுதற்குரிய ஆற்றலைத் தமக்கு வழங்குமாறு இறைவனை வேண்டி நெஞ்சம் நெக்குருகிப் போற்றினார். உயிர் இரக்கமே உருவாகிய இராமலிங்க அடிகளார், உலக நலங்கருதி வேண்டிய விண்ணப்பத்தினை உளங்கொண்ட எல்லாம் வல்ல சிவபெருமான் அடிகளாருக்குக் கனவிலும், நனவிலும், ஒளி நினைவிலும் நாளும் தோன்றி முத்தி நெறியின் உண்மையை உணர்த்தி மன்னுயிர்க்கு நலஞ் செய்யும் சித்திநெறியை வழங்கியருளினார் என்னும் செய்தி அடிகளார் பாடியருளிய திருவருட்பாவிலுள்ள அகச் சான்றுகளால் வலியுறுத்தப் பெறுகிறது.

சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவுடைய மக்கள், உடம்பின் நிலையாமையை யுணர்ந்து தம் உடம்பு மூவாமலும் சாவாமலு மிருத்தற்குரிய வழிமுறைகளை மேற்கொண்டொழுகுதல் வேண்டும். உடம்பு இவ்வுலகில் நிலைபெற வாழும் வன்மையைப் பெற்றால் அதன் பயனாக அவ்வுடம்பில் நிலைபெற்றுள்ள உயிரின் அறிவும் அன்பு முதலிய பண்புகளும் வளம் பெற்று நிறைவடைதல் இயலும். எனவே இவ்வுடம்பு பசி பிணி முதலியவற்றால் மெலிவடைந்து இறவாதபடி இதனை நிலைபெறச் செய்வது சன்மார்க்க நெறியினை மேற்கொண்ட சித்தர்களின் தலையாய கடமையாயிற்று.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ் ஞானம் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயமறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

(திருமந்திரம்-724)