பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

281


சில்வாழ்நாள் பல்பிணிச்சிற்றறிவினராகிய மக்கள் நோயற்ற வாழ்வும், நிறைந்த பேரறிவும் உடையவராய்த் தாம் இறைவன்பால் பெற்ற சித்திநெறியின் ஆற்றல் கொண்டு இறவாமல் பிறவாமல் என்றும் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்வதற்குரிய சாகாக் கல்வியினைச் சன்மார்க்க நெறியில் நின்று பரப்புதலையே தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டருளினார் என்பது அடிகள் பாடியருளிய திருவருட்பாப் பாடல்களினால் நன்கு புலனாகிறது.

நோயுற்றாரையும், இறந்தாரையும் கண்டு ஆற்றாத கெளதமபுத்தர் இரக்க உணர்வுடையராய் மக்களது துன்பம் துடைத்தற்குரிய வழிமுறைகளைக் காணுதல் வேண்டித் தமது அரசபதவியை ஒதுக்கித் துறவு பூண்டா ரென்பது நம்நாட்டின் பழைய வரலாறாகும். புத்தர் பெருமானைப் போலவே நோய்களினாலும், சாதலினாலும் மக்கள் படும்துயரத்தை மாற்றத் திருவுளங் கொண்ட இராமலிங்க வள்ளலார் எவ்வுயிர்குஞ் சார்பாய் அம்பலத்திலே அருள் நடம் புரியும் செம்பொருளாகிய இறைவனது திருவருளைப் பெற்று அரியவற்றையெல்லாம் எளிதில் செய்து முடிக்கும் சித்தித்திறமுடையராய் உறக்கத்திலும், சாவிலும் தோய்ந்துகிடக்கின்ற மக்களை விழித்தெழச் செய்து மரணமிலாப் பெருவாழ்வில் வாழும் நெறிமுறைகளை அறிவுறுத்தியருளினமை சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த புதிய வரலாறாகும்.

உயிர்க்குயிராகிய முழுமுதற் பொருளை உள்ளம் உருகி வழிபட்டால் எல்லாச் சித்திகளையும் பெற்று எல்லா உயிர்களுக்கும் நன்மைதரும் அரிய செயல்களை எளிதிற் செய்து முடிக்கலாம் என வள்ளலார் இறைவன் அருளால் பெற்ற சித்தித்திறத்தை மக்கள் எல்லோரும்