பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286


யாரைக் குருவாகக் கொண்டு திருவருள் ஞானம் பெற்றவ ரென்பது,

உலகியல் உணர்வோர் அணுத்துணையேனும்
     உற்றிலாச்சிறிய ஒர் பருவத்
திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்
     ஏற்றவுந் தரமிலா மையினான்
விலகுறுங் காலத்தடிக்கடி ஏற விடுத்துப்பின்
     விலகுறா தளித்தாய்
திலக நற்காழி ஞானசம்பந்தத் தெள்ளமுதாம்
     சிவகுருவே.

(திரு 3226)

எனவரும் பாடலால் விளங்கும்.

தாம் உலகியல் உணர்வு சிறிதும் பெற்றிராத இளம் பருவத்திலே தமக்குக் குருவாகிய சம்பந்தப் பிள்ளையார் தம் உள்ளத்திலிருந்து தம்மை அருள் நெறியில் ஒழுகப் பணித்ததும் தமக்குப் போதிய பக்குவமில்லாமையால் அந்நெறியில் விலகநேர்ந்தபோது விலகாதபடி அடிக்கடி உடனிருந்து நன்னெறிப்படுத்தியதும் ஆகிய செய்திகளை வள்ளலார் இப்பாடலில் குறித்துள்ளமை காணலாம்.

இறைவன் அருளால் உயிர்கள் பெறுதற்குரிய அனுபவம் உயிர் அநுபவம், அருளனுபவம், சிவ அனுபவம் என மூன்று வகைப்படும் என்றும், இம்மூன்றும் ஒன்றுக் கொன்று தொடர்புடையன வென்றும் ஞானசம்பந்தப் பிள்ளையார் வள்ளலார் உள்ளத்திலிருந்து அறிவுறுத்தி யருளினார் என்னும் இச்செய்தி,

உயிரனுபவம் உற்றிடில் அதனிடத்தே
     ஓங்கரு ளனுபவம் உற்றிடும் அச்
செயிரில் நல் அநுபவத்திலே சுத்த
     சிவவனுபவம் உறும் என்றாய்