பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297


இன்புருவம் ஆகிய மூவகை உருவங்களையும் பெற்ற சிறப்பினை வியந்து போற்றிய திறம் இங்குக் கூர்ந்துணர்ந்து மகிழத்தக்கதாகும்.

வள்ளலார் இறைவனருளால் தாம் பெற்றனவாகக் கூறும் சுத்த தேகம், பிரணவதேகம், ஞானதேகம் ஆகிய மூவகை உடம்புகளின் தன்மையினை,

எளியவாது செயவாரெங்கள் ஈசனை
ஒளியையுன்னி யுருகுமனத்தராய்த்
தெளிய வோதிச் சிவாயநம வென்னுங்
குளிகை யிட்டுப் பொன்னாக்குவன் கூட்டையே.

(திருமந்திரம் 2709)

எனவும்,

ஆமவரிற்சிவனாரருள் பெற்றுளோர்
போமலந்தன்னாற் புகழ் விந்து நாதம் விட்
டோமயமாகி யொடுங்கலி னின் மலந்
தோமறு சுத்தா வவத்தைத் தொழிவே

(திருமந்திரம் 2233)

எனவும்,

ஞானிக்குக் காயம் சிவமே தனுவாம்
ஞானிக்குக் காயம் உடம்பேயது வாகும்
மேனிற்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம் முப்பாழ் கெட்ட முத்தியே.

(திருமந்திரம் 2135)

எனவும் வரும் திருமந்திரப் பாடல்களால் திருமூலநாயனார் விளக்கியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

இவ்வாறு இறைவனது திருவருட்சுதந்திரத்தை வேண்டி, அழியும் தன்மையதாய புலாலுடம்பினை